Kabyle: New Testament

Tamil

Psalms

84

1சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
2என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
3என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
4உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா)
5உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
6அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
7அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
8சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)
9எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம் பண்ணினவரின் முகத்தைப் பாரும்.
10ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
11தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
12சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.